எம் கிராமத்தின் நடுவினிலே அழகுற நந்தியாறு பெருக்கெடுத்து கடலுடன் சங்கமிக்கின்றது. மாரிகாலத்தில் நந்தியாறு நிரம்பிவழிந்து வெள்ளம் பெருக்கெடுக்கின்ற சந்தர்ப்பத்தில் அந்நீரினை கடலுடன் சங்கமிக்க வைப்பதற்காக பெருங்கடலுக்கும் எமது ஆற்றுக்கும் இடையில் அமைந்துள்ள நிலப்பரப்பினை வெட்டி கடலையும் ஆற்றையும் இணைத்து வாய்க்கால் அமைக்கப்படும். இவ்வாறு ஆற்றினை வெட்டி வாய்க்கால் அமைக்கப்படுவதனால் சிறப்பான காரணப்பெயராக ''வெட்டுவாய்க்கால்'' எனும் பெயர் அமைந்தது. இப் பெயரே மருவி பின்னர் வட்டுவாகல் ஆக மாற்றம் பெற்றதாக எம் கிராமத்தின் முன்னோர்கள் கூறுகின்றார்கள்.
இப்பொழுதும் ''வெட்டுவாய்க்கால்'' என்ற பெயரே அரசுசார்பான அனைத்து ஆவணங்களிலும் பாவிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.