இயற்கை பல விசித்திரங்களையும் எண்ணிலடங்காப் புதுமைகளையும் கொண்டுள்ளது. அதிலும் சிறப்பாக கடலில் கணக்கில் அடங்கா நீர்வாழ் பிராணிகள் பல வாழ்ந்து வருகின்றன் அவைகளில் நமக்கு நன்கு அறிந்தது ஒரு சில வகைகளே. அதில் ஒன்றுதான் இந்த மட்டி என்று அழைக்கப்படும் ஒரு வகை கடல் உணவு ஆகும். இது ஓட்டு உணவு வகைக்குள் ( Shell foods ) உள்ளடக்கப்படுகிறது.
கடல் மட்டிகளுக்குப் பெர்னாவிடிஸ் என்பது விலங்கியல் பெயர். மைடிலிடே என்ற சிப்பி வகையைச் சேர்ந்த இவை பல நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கடல் பகுதிகளிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றின் ஓடுகளுக்கு உள்ளே உள்ள சதை மிகவும் சுவையானதாக இருப்பதால் பலரும் இதை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
வட்டுவாகலும் மட்டியும்
மட்டியானது வட்டுவாகல் மக்களுடன் இன்றியமையாத ஒன்றாக அமைந்துவிட்டிருந்தது. எம் நந்தியாற்றிலிருந்து கிடைக்கின்ற அனைத்து உணவுகளும் சுவையாக இருந்தாலும் மட்டியிலிருந்து கிடைக்கும் சுவையே தனியானது. வார்த்தைகளில் அடக்கமுடியாது. சோற்றுடன் சாப்பிடுவதற்குக் கறியாகவும் , பொரியலாகவும் மிகவும் சுவையாக சமைக்கப்படும். அத்துடன் சிறப்பாக எம் கிராம மக்களால் ''பால்பொரியல்'' என்ற விசேடமாகத் தயாரிக்கப்படும் கறியானது நா ததும்பும் சுவையயைத் தரவல்லது..
போராட்ட காலப்பகுதியில் எமது கிராம, அயல் கிராம மக்கள் பலரது வயிற்றை நிரப்பி அதுவே பிரதான உணவாகவும் மாறியிருந்தது.
இலங்கையின் பல பகுதிகளில் பலவேறு வகையான பல உருவ அமைப்புக்களில் கிடைக்கப்பெற்றாலும், ஓரளவு உருண்டை வடிவம் கொண்ட எமது நந்தியாற்றிலிருந்து பெறப்படும் மட்டிக்கு வடமாகாணத்திலே மிக சிறந்த வரவேற்புக் கிடைப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
மேலதிகமாக இவ் மட்டியின் கழிவுப் பொருளாகக் கிடைக்கும் சிப்பியானது (ஓடு) சுண்ணாம்பு (கல்சியம் காபணேற்று) தயாரிக்கப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமும் மட்டி மக்களுக்கு வருவாயை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
இலங்கையின் கடற்கரைப் பகுதிகள் பலவற்றிலிருந்து ஏரல் என்ற கடல்வாழ் உயிரினமும் பெறப்படுகிறது. இது மட்டியிலிருந்து வேறுபட்டதாகும் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
மருத்துவம்
ஆண்மைக் குறைபாட்டை நீக்கி ஆண்மையை நிவர்த்திசெய்யும் விசேடமருந்தாகின்ற ஆற்றலும் மட்டிக்குக் காணப்படுகிறது. இதனாலேயே மேலைத்தேய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பிரதான பதார்த்தமாகவும் இது நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.