வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு அந்த நாடுகளில் உள்ள தூதராலயங்கள் மூலமாக இனி கடவுச்சீட்டு வழங்குவதில்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்துக் கோரியுள்ள இலங்கைப் பிரஜையொருவர், அதே நாட்டில் வசிக்கும் காலப்பகுதிக்குள் அவருக்கு இலங்கைக் கடவுச்சீட்டு வழங்கப்படமாட்டாது என்ற நடைமுறை கடந்த நான்காம் திகதி முதல் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குத் தப்பியோடி அகதி அந்தஸ்துக் கோரும் நபர்கள் முதலில் தமது இலங்கைக் கடவுச்சீட்டை கிழித்தெறிந்து விட்டே தமக்கு இலங்கையில் வாழ முடியாதிருப்பதாக அந்நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருகின்றனர்.
அதன் பின் அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் சரியான முறையில் இருக்குமிடத்து அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படுகின்றது. அதன் பின் அவர்கள் புதிய இலங்கைக் கடவுச்சீட்டொன்றைப் பெற்று தமது வதிவிட விசாவை அதில் பதித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
அவ்வாறு வதிவிட வீசாவை பதித்துக் கொள்வதற்காக புதிய பாஸ்போர்ட் பெற முனைபவர்களுக்கே இனிமேல் வெளிநாடுகளில் உள்ள தூதுவரலாயங்கள் மூலமாக கடவுச்சீட்டுகளை வழங்குவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்குப பதிலாக இலங்கைக்குச் செல்வதற்காக மட்டும் தற்காலிக அடையாள ஆவணம் வழங்கப்படும். அதனை எடுத்துக் கொண்டு இலங்கைக்குச் சென்றே புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டு தாம் வாழும் நாடுகளின் வதிவிட வீசாவைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
இலங்கையில் அச்சுறுத்தல் உள்ளதாலேயே அநேகமானவர்கள் அகதி அந்தஸ்துக் கோருகின்றனர் இலங்கை அரசோ அகதி அந்தஸ்து வழங்கப்பட்டால் அவர்கள் இலங்கைக்குச் சென்றே புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டு தாம் வாழும் நாடுகளின் வதிவிட வீசாவைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் அர்வித்துள்ளமை அகதி அந்தஸ்துக் கோருகின்றவருக்கு மேலும் ஆபத்தே.