விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதன் நோக்கத்தினை நோக்கி நகர்கின்றதா? இந்தக் கேள்விக்கான பதிலை காண்பது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. மிகவும் கட்டுக்கோப்புடன் செயற்பட்ட ஒரு கட்சி என்ற பெருமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.
மன்னிக்கவும் இழந்து விட்டது என்பதே பொருத்தமானது.கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே சில பிரச்சனைகள் அதனுள் முளைவிட்டிருந்தாலும் தோதலுக்குப் பின்னரே பாரிய பிளவுகளைச் சந்தித்திருந்தது. திரு சிவாஜிலிங்கம் திரு பியசேனவின் கட்சி விலகலுடன் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது என்றே கூறவேண்டும்.
மன்னிக்கவும் இழந்து விட்டது என்பதே பொருத்தமானது.கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே சில பிரச்சனைகள் அதனுள் முளைவிட்டிருந்தாலும் தோதலுக்குப் பின்னரே பாரிய பிளவுகளைச் சந்தித்திருந்தது. திரு சிவாஜிலிங்கம் திரு பியசேனவின் கட்சி விலகலுடன் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது என்றே கூறவேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் செயற்குழுவும் எடுத்த சில தவறான முடிவுகளே இதற்குக் காரணம் என எண்ணத் தோன்றுகின்றது. ஆனாலும் கட்சியின் ஒற்றுமைக்கு பாதகமாக நடந்து கொண்டமை சில பாராளுமன்ற உறுப்பினர்களது தவறான நடவடிக்கையாகும். இவை எல்லாமே முடிந்தவை. பழைய குப்பையை கிழறுவதில் எந்தப்பயனும் இல்லை.
ஆனாலும் கட்சியால் அண்மையில் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் வியக்கவைக்கிறது, மெச்சத் தோன்றுகிறது. கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளையோர் அணி உருவாக்கப்பட்டமை தமிழ் மக்களால் பாராட்டுதலையும் பாரிய வரவேற்பையும் பெற்றுள்ளது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமாக இருந்தாலும் இது சரியாகவும் கட்டுக்கோப்புடனும் மேற்கொள்ளப்பட்டால் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தமது அரசியல் இருப்பை உறுதியாக்க முடியும் என்பதை அடித்துக் கூறமுடியும். ஏனெனில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அரச தரப்பு இவ் இளைஞர்களைத் தற்காலிகமாக கட்சிக்குள் உள்வாங்கியே வெற்றிபெற்றிருந்தார்கள். அதிலும் குறிப்பாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் (வவுனியா, முல்லைத்தீவு, மன்னார்) அரசாங்க அமைச்சர் ஒருவரின் நெறிப்படுத்தலில் பட்டதாரி இளைஞர்களை தற்காலிகமாக உள்வாங்கி, அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக உறுதியளித்து பெருமளவான தமிழ் வாக்குகளை அபகரித்து இரண்டு ஆசனங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அப் பட்டதாரி மாணவர்களுக்கு எவ்வித வேலை வாய்ப்புக்களும் வழங்காது ஏமாற்றப்பட்டது வேறு கதை.
இங்கு இளையோர் அணி நிரத்தரமாக உள்வாங்கப்படுவது புத்திசாலித்தனமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இயக்க வேறுபாடுகள் இன்றியும், அரசியல் தலையீடுகள் இன்றிய தகுதியான இளைஞர்கள் உள்வாங்கப்படுதல் மிக அவசியமாக மக்களால் கருதப்பதுகிறது. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பல கட்சிகளையும், இயக்கங்களையும் சேர்ந்த ஒரு கூட்டுக் கட்சியாகும். மாவட்ட அடிப்படையில் இச்செயற்பாட்டை உடனடியாகவும், சரியாகவும் ஏற்படுத்தல் மிக அவசியமாகும். ஏனெனில் வடமாகாணத் தேர்தலுக்கு முன் கட்சி சீர்பெற்று மறுசீரமக்கப்படுதல் வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் வாக்குகளை சிதறடையாமல் பாதுகாக்காப்பதற்கு வழிசமைக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுபவம்வாய்ந்த வயது முதிர்ந்த தமிழ்த் தலைமைகள் தமது அரசியல் ஞானத்தை இளையவர்களுக்கு ஊட்டி கட்சியிலிருந்து விலகி, இளையோர்ககு ஆக்கமும் ஊக்கமும் வழங்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் அண்மைய அவாவாக இருக்கிறது.
எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் எவ்வாறு துணைநிற்கப் போகிறது என்பது அக்கட்சியின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. இத்தார்மீகப் பொறுப்பிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழுவாது என்பதே தமிழ் மக்களின் அதீத நம்பிக்கையாகும். மீண்டும் தமிழ்மக்கள் ஏமாறமாட்டார்கள் என்று தமிழர் நாம் நம்புவோமாக.