சனல் 4 தொலைக்காட்சிக்கு பதில் கொடுக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியைத் தயாரித்துள்ளது இலங்கை அரசு . இதில் புலிகளின் முந் நாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ் செல்வனின் மனைவி, கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களின் மனைவி மற்றும் மொழிபெயர்ப்பாளர் தயா மாஸ்டர் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர் என்ற செய்திகளும் கசிந்துள்ளது.
இந் நிகழ்ச்சிக்காக எப்படிப் பேசவேண்டும் , எதனைப் பேச வேண்டும் என்பது குறித்து இவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய கொலைக்களங்கள் காணொளியால் இலங்கை பெரும் அவகீர்த்தியைச் சந்திக்க நேர்ந்துள்ளது. அதன் சுற்றுலாத் துறையில் கூட 8% சதவீத வீழ்ச்சி காணப்படுவதாகவும் மேலும் அறியப்படுகிறது. இது இவ்வாறு தொடர்ந்தால் இலங்கை இன்னும் பல பின்னடைவுகளை அடையும் எனவும், எனவே உடனடியாக சனல் 4 தொலைக்காட்சியோடு சமரசம் பேசுமாறு புத்திஜீவிகள் மகிந்தருக்கு அறிவுரை கூறியுள்ளனர்.இதன் ஒரு அங்கமாகவே அவர் சமீபத்தில் சனல் 4 தொலைக்காட்சியோடு சமரசம்பேச முற்பட்டார். ஆனால் சனல் 4 தொலைக்காட்சியோடு நாம் ஏன் சமரசமாகப் போகவேண்டும் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தளபதிகளின் மனைவிமாரை வைத்து அவர்களுக்கு பாடம் புகட்டலாம் என நினைக்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ. இதன் ஒரு அங்கமாகவே தளபதிகளின் மனைவிமார் களமிறங்கவுள்ளனராம். சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரண்டைந்தார். அதோபோல தளபதி சூசை அவர்களின் மனைவி கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களோடு இராணுவத்திடம் சரணடைந்து தற்போது புலிகளைப் பற்றி அவதூறு பேசி இலங்கை அரசின் அடிவருடியாக மாறியிருக்கும் தயாமாஸ்டரும் அடக்கம்.யுத்தகாலத்தில் புலிகள் எவ்வாறு நடந்தார், அவர்கள் எதைச் செய்தார்கள் தாம் ஏன் இராணுவத்திடம் சரண்டைந்தோம் என்று பல விடையங்களை இவர்கள் சொல்லி இருக்கிறார்களாம் . இவர்கள் சொல்லியிருக்கும் விடையங்கள் சனல் 4 தொலைக்காட்சிக்கு கொடுக்கப்படும் தகுந்த பதிலடியாக இருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சு கருதுகிறது. ஆனால் இவர்கள் அனைவரும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தே பேசுகிறார்கள் என்பது யாவரும் அறிந்த விடையம். அவர்கள் சுயாதீனமாக இயங்கவில்லை என்பதும் சர்வதேசம் அறிந்த உண்மை. இந் நிலையில் இவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் சர்வதேச அளவில் செல்லுபடியற்றவையாகவே கருதப்படும் என்பதில் ஐயமில்லை.